You are here: Home // கட்டுரை // நான் சிந்துன கண்ணீர் கடவுளுக்குத் தெரியும்! உருகும் சூப்பர் சிங்கர் ஆஜித் அம்மா

நான் சிந்துன கண்ணீர் கடவுளுக்குத் தெரியும்! உருகும் சூப்பர் சிங்கர் ஆஜித் அம்மா

தமிழகத்தின் செல்லக் குரலோன்… ஆஜித். விஜய் டி.வி-யின் சூப்பர் சிங்கர் ஜூனியர். 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு, ஏ.ஆர்.ரஹ்மான் இசைப் பள்ளியில் ஓர் ஆண்டுக்கு இலவசப் பயிற்சி என டபுள் ஜாக்பாட் அடித்திருக்கிறான் ஆஜித்.

பரவசத்தில் திக்குமுக்காடிக்கிடந்த ஆஜித்தின் அம்மா ஷபானாவிடம் பேசினேன்.

”எல்லாமே ஒரு கனவு மாதிரிதான் இன்னும் இருக்கு. ஏ.ஆர்.ரஹ்மான் சார் நிகழ்ச்சிக்கு வந்தது, வாழ்த்தினது, ஹரிஹரன் சாரைச் சந்திச்சது… எதையுமே நம்ப முடியலை. பத்து வருஷங்களுக்குப் பின்னாடி நடக்க வேண்டியது எல்லாம் இப்பவே நடந்துடுச்சு. என் மகன் ஆஜித் எனக்குக் கொடுத்த சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியலை” – சட்டென்று விழியோரம் எட்டிப் பார்த்த கண்ணீரைத் துடைத்தபடி தழுதழுக்கப் பேசினார் ஷபானா.

”என் அப்பா மிலிட்டரியில வேலை பார்த்தவர். அப்புறம் பிசினஸ் ஆரம்பிச்சதுல ஏக நஷ்டம். குடும்பம் நொடிச்சுப்போன சமயத்துலதான் எனக்குக் கல்யாணம் ஆச்சு. பத்து வருஷம் கழிச்சு உண்டான குழந்தை ஆஜித். ஆனா, என் கணவர்கிட்ட நான் சொன்னப்ப ‘கலைச்சிடு’னு சொன்னார். ‘முடியாது’னு சொன்னேன். அதுவே எங்க பிரிவுக்குக் காரணமாயிடுச்சு.
airetel-super-singer-aajith-family
என் கணவர் விட்டுட்டுப் போய்ட்டார். ரெண்டு மாசக் கர்ப்பிணியா இருக்கும்போது என் அம்மா வீட்டுக்கு வந்தேன். அதுக்கப்புறம் அழுகையும் துயரமுமாவே ஒவ்வொரு நாளும் கடந்துச்சு. ஆரம்பத்துல டெல்லியில் வேலை செஞ்சுக்கிட்டு இருந்த என் தம்பி மாசாமாசம் பணம் அனுப்புனான். ஆனா, அதுவும் நிலைக்கலை. ஒரு விபத்துல அவனைப் பறிகொடுத்துட்டோம். வெறும் பத்தாவது வரைக்குமே படிச்சு இருந்த எனக்கும் எந்த வேலையும் கிடைக்கலை. வாழ்க்கையே சூனியமாயிட்ட மாதிரி இருந்துச்சு. அப்போ நான் சிந்துன கண்ணீர் கடவுளுக்குத்தான் தெரியும். என்ன பண்றதுன்னு ஏங்கி நின்னப்போ, அக்காவும் ரெண்டு தங்கச்சிகளும்தான் என்னைத் தாங்கிப் பிடிச்சாங்க. அந்தச் சமயங்கள்ல எல்லாம் என்னோட ஒரே நம்பிக்கையும் ஆறுதலும் ஆஜித்தான். என்னோட ஆசை, கனவு, லட்சியம், நம்பிக்கை எல்லாத்தையும் இந்தச் சின்ன வயசுலயே நிறைவேத்திட்டான் என் மகன்”- நெகிழ்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் வார்த்தைகள் வராமல் தவிக்கிறது தாய் மனசு!

பக்கத்தில் இருந்த ஆஜித்தின் நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தம் பதித்துவிட்டு தொடர்கிறார் ஷபானாவின் அக்கா ஹமீதா. ”ஆஜித், படிக்கிற ஆல்ஃபா ஸ்கூல்ல நான் டீச்சர். சின்ன வயசுல இருந்தே ஆஜித் படு சுட்டி. அவனுக்கு ஒரு வயசு இருக்கும்போது ரேடியோவுல பாட்டு கேட்டதும் அதை அப்படியே அழகா ஹம் பண்ணான். ஒன்றரை வயசுல தெள்ளத்தெளிவா அட்சரம் பிசகாமத் தமிழ் பேசினான்.

யு.கே.ஜி. படிக்கும்போதே ‘வந்தே மாதரம்’ பாட்டை கீ போர்டுல வாசிச்சுக்கிட்டே பாடினான். ‘சூப்பர் சிங்கர் ஜூனியர்-2’லயே அவன் கலந்துக்கிட்டான். ஆனா, ஜெயிக்க முடியலை. ‘ஜூனியர் 3’-க்கு அப்ளை பண்ணப்பகூட முதல்ல அவனுக்கு நம்பிக்கை இல்லை. ஆனா, ஒருகட்டத்துல ஜெயிச்சே ஆகணும்னு ஒரு உத்வேகம் அவனுக்கு வந்துடுச்சு. அந்த உத்வேகம்தான் இன்னைக்கு எல்லாரையும் திரும்பிப் பார்க்க வெச்சுருக்கு” என்று சொல்லும் பெரியம் மாவையே பார்த்துக்கொண்டு இருந்த ஆஜித் மெள்ளப் பேச ஆரம்பித்தான்.

”அங்கிள், நான் யார்கிட்டயும் பாட்டு கத்துக்கல. இந்துஸ்தானி, கர்னாட்டிக் மியூஸிக் எதுவும் பழகலை. ஆனா, போட்டியில் இருந்த எல்லாரும் செம பிராக்டீஸ்ல இருந்தாங்க. முதல்ல நான் ரொம்பப் பயந்துட்டேன். பெரியம்மாதான் திரும்பத் திரும்ப ‘டேய், உன்னால முடியும்… உன்னால நிச்சயமா முடியும்டானு’ சொல்லிட்டே இருந்தாங்க. ஒவ்வொரு பாட்டையும் பத்து தடவை விடாமக் கேட்டுக் கேட்டு பிராக்டீஸ் பண்ணேன். ரூம் கதவைச் சாத்திக்கிட்டு ரிகர்சல் பண்ணுவேன். இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு அங்கிள். ரஹ்மான் சார் மாதிரி நானும் மியூஸிக் டைரக்டர் ஆகணும். அதான் அங்கிள் என் கனவு” என்கிறான் ஆஜித்.

கனவு மெய்ப்படட்டும்!

Tags:

Copyright © 2009 tamilcinematv. All rights reserved.
footer.php
[x]